×

சென்னை உயர் நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசும்போது, தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 472 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்திருக்கிறார்கள்.மாநிலத்தில் 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்பு சேகரிப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. உடல் உறுப்பு தானம் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக விடியல் என்ற செயலியும் செயல்பாட்டில் உள்ளது.

நடப்பாண்டு, இதுவரை 128 பேரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டு, 733 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 53 பேர் இதயமும், 84 பேர் நுரையீரலும், 114 பேர் கல்லீரலும், 228 பேர் சிறுநீரகமும் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரத்து 205 பேர் சிறுநீரகத்துக்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும், 75 பேர் இதயத்துக்காகவும், 62 பேர் நுரையீரலுக்காகவும் மொத்தம் 6 ஆயிரத்து 923 பேர் உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரசின் பிளீடர் பி.முத்துகுமார், உடல் உறுப்பு தான உறுதி மொழியை வாசித்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், காணொலி காட்சி வாயிலாக மதுரை கிளை நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.

The post சென்னை உயர் நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Donation Awareness ,Camp ,Chennai High Court ,Chief Justice ,Chennai ,Organ Donation Awareness ,Madras High Court ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...